இந்து சமுத்திர பிராந்தியத்தில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்காக இருதரப்பு இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக Times Of India செய்தி வௌியிட்டுள்ளது.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை துறைமுகங்களில் கடற்படை கப்பல்கள் மற்றும் உளவுக் கப்பல்கள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் Times Of India தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 2, 3 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் ஆயுதப் படையினரின் திறனை விருத்தி செய்வதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளதாகவும், இதற்கமைய இலங்கைக்கான 150 மில்லியன் டொலர் பாதுகாப்பு கடன் வசதியை இந்தியா நீடித்துள்ளதாகவும் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீனாவின் போர்க்கப்பலான HAI YANG 24 HAO இந்த மாத தொடக்கத்தில் கொழும்பில் நங்கூரமிடப்பட்ட நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.
சீன ஆய்வுக் கப்பலான SHI YAN 6 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.