ஜனசக்தி இன்சூரன்ஸ் குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரிடம் இருந்து சுமார் 144 கோடி ரூபாவை மோசடி செய்ததாக பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸ் மீது 10 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் 07 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபரிடமிருந்து கிடைக்கப்பெற்ற பணிப்புரைக்கு அமைவாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
நேற்று (05) திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகிய குற்றஞ்சாட்டப்பட்ட பிரையன் தோமஸ், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தாம் நிரபராதி எனத் தெரிவித்ததையடுத்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் தீர்மானித்தது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தொடர்ந்தனர். கொழும்பு பல்மைரா அவென்யூ 25 இல் வசிக்கும் பிரையன் தோமஸ் மீது இவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2017 முதல் 20 முறை, நூற்று நாற்பத்து மூன்று கோடி எழுபத்து மூன்று லட்சத்து ஐம்பத்து எட்டாயிரத்து அறுநூற்று அறுபத்து ஐந்து (ரூ. 1,437, 358, 665/) ரூபாவை 39, மல்பாறை, கொழும்பு 07 என்ற முகவரியில் வசிக்கும் தினேஷ் ஷாப்டரிடம் இருந்து 20 காசோலைகளில் பெறப்பட்ட பணத்தை குற்றம் சாட்டப்பட்டவர் திருப்பித் தராமல் மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.