web log free
November 25, 2024

மீன்பிடி படகுகளுக்கு இலவச மண்ணெண்ணெய்

மீன்பிடி படகுகளுக்கு 2 ஆம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் ஆரம்பம் சீனக் குடியரசினால் இலங்கையின் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக உதவி அடிப்படையில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகிக்கும் இரண்டாம் கட்ட செயல் திட்டம் கடந்த (02) ஆம் திகதி முதல் நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

சிறிய அளவிலான கடற்றொழிலாளர்களுக்கு இரு கட்டங்களாக மண்ணெண்ணெய் வழங்கப்படுகின்றன.

15 கடற்றொழில் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட, நேரடியாக கடற்றொழிலில் ஈடுபடும் 29,057 OFRP மற்றும் MTRB மீன்பிடி படகுகளுக்கு இவ்வாறு இரண்டாம் கட்டத்தில் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் பாணந்துறை கடற்றொழில் துறைமுகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா மற்றும் இலங்கைக் சீனத்தூதுவர் கீ ங்ஹொங் (Qi Shenhong) ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

சீனக் குடியரசினால் உதவி அடிப்படையில் 4.5 மில்லியன் லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டதுடன் அதன் சந்தைப் பெறுமதி 1080 மில்லியன் ரூபாவாகும்.

அதன் பிரகாரம் முதல் கட்டத்தில் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, தங்காலை, கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய 15 கடற்றொழில் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட, நேரடியாக கடற்றொழிலில் ஈடுபடும் வெளிப்புறம் இயந்திரம் பொருத்தப்பட்ட 24,341 OFRP மற்றும் MTRB மீன்பிடி படகுகளுக்கு 96 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டதுடன் முதல் கட்டத்தில் படகொன்றுக்கு தலா 75 லீற்றர் அடிப்படையில் 1,825,575 லீற்றர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டத்தில் படகொன்றுக்கு 78 லீற்றர் வீதம் வழங்கப்படுவதுடன் ஒரு மீன்படகிற்கு 37,026 ரூபா பெறுமதியான மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது.

நாட்டிலுள்ள 15 கடற்றொழில் மாவட்டங்களிலுள்ள 97 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக இவை விநியோகிக்கப்படவுள்ளன. இவ் எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கம் 60 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது.

இதன் பிரகாரம், கொழும்பு 405, களுத்துறை 455, காலி 816, மாத்தறை 1057, அம்பாந்தோட.டை, 1050, கல்முனை 1129, மட்டக்களப்பு 1851, திருகோணமலை 3937, கிளிநொச்சி 1169, யாழ்ப்பாணம் 5952, மன்னார் 3070, முல்லைத்தீவு 1523, புத்தளம் 3145, சிலாபம் 1993, கம்பஹா 1565, என்ற அடிப்படையில் 15 கடற்றொழில் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட, 29057 மீன்பிடிப் படகுகளுக்கு இரண்டாம் கட்டத்தில் மண்ணெண்ணெய் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் மண்ணெண்ணெய் கிடைக்காத படகு உரிமையாளர்களின் கோரிக்கைகளின் பிரகாரம் இரண்டாம் கட்டத்தின் கீழ் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd