எதிர்காலத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நிலவும் மோதல் காரணமாக இந்நிலை ஏற்படலாம் என்று ஜனாதிபதி கூறினார்.
இந்த முரண்பாடுகள் இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஜனாதிபதி அமைச்சரவையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடியானது உலகளாவிய எரிபொருள் விலையில் ஏற்படுத்தக்கூடிய கடுமையான தாக்கம் குறித்து கவனத்தை ஈர்த்து, ஆபிரிக்க ஒன்றியத்தின் முன்மொழிவின் பிரகாரம் இந்தப் பகைமைகளை உடனடியாக நிறுத்துமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அவர்களை ஆராய்ந்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் வெளிவிவகார அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இஸ்ரேலில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அங்கு வாழும் இலங்கையர்கள் மற்றும் இஸ்ரேலிய மக்கள் மீது ஏற்படுத்திய பாதிப்புகள் தொடர்பில் தான் அவதானம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.