காஸா பகுதியில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, உலக சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டில் எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இது தொடர்பான பணிப்புரையை அண்மையில் வழங்கியுள்ளார்.
இதன்படி, தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களை நல்ல நிர்வாக முறைக்கு கீழ்ப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இரண்டு மாத காலப்பகுதியின் பின்னர் நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க எரிசக்தி அமைச்சும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன.
மீண்டும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால், முந்தைய QR குறியீடு அமைப்பு மீண்டும் தொடங்கப்படுமா அல்லது மற்றொரு நிர்வகிக்கப்பட்ட விநியோக முறை செயல்படுத்தப்படுமா என்பது பற்றி ஆராயப்படுகிறது.
எனினும் தற்போது எரிபொருள் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை.
எதிர்காலத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.