மழை காரணமாக மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நில்வளா மற்றும் ஜிங் கங்கை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, கொட்டபொல, பிடபெத்தர, பஸ்கொட, அக்குரஸ்ஸ, அதுரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆற்றின் கால்வாய்கள் நிரம்பி வழிவதால் நேற்று இரவு முதல் பல பகுதிகளில் உள்ள புறவழிச்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தின் தெனியாய வலயக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (23) மூடப்படும் என தென் மாகாண கல்விச் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்தார்.
மாத்தறை மாவட்டத்தின் ஏனைய வலயங்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இதுவரை பாடசாலைகளை நடத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.