web log free
July 02, 2025

எதிர்க்கட்சி கொண்டு வந்த பிரேரணைக்கு பாராளுமன்றில் வெற்றி!

இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஆளுங்கட்சி வழிமொழிந்ததையடுத்து, அப்பிரேரணை வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று (08) ஆற்றிய உரையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று இந்த பிரேரணையை முன்வைத்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என இந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கிரிக்கெட் நிர்வாகத்திற்கான புதிய ஏற்பாடுகள் அடங்கிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இது தொடர்பான பிரேரணையை உறுதிப்படுத்தினார்.

இதனிடையே, இலங்கை கிரிக்கெட் நிறுவனம், சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாடியதாக தகவல் கிடைத்துள்ளதால், அதற்கு முரணாக செயற்படக்கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது ஜனாதிபதி தமது நிலைப்பாடு தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

சித்ரசிறி அறிக்கையை நடைமுறைப்படுத்தி புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd