நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய கோட்டாபய, மஹிந்த, பசில் ராஜபக்ச மற்றும் பி.பி.ஜயசுந்தர, அஜித் நிவார்ட் கப்ரால், எஸ். ஆர். ஆர்டிகலா, நிதிச் சபை உறுப்பினர்கள் மற்றும் டி.லக்ஷ்மன் ஆகியோரின் குடியுரிமைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் யோசனை தெரிவித்துள்ளார்.
அங்கு கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் கூறியதாவது:
'நாட்டை திவாலாக்கிய குழுவை உரிய முறையில் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது நாடு முழுவதும் எழுந்துள்ளது. இனியும் இவர்கள் இவற்றைத் தொடர்வார்களா என்று நாடு கேட்கிறது. எனவே, இவர்களுக்கு மேலும் சிவில் உரிமைகளை வழங்குவது பொருத்தமற்றது. உச்ச நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட குழுவின் குடியுரிமைகளை இரத்து செய்யும் நடவடிக்கை விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கு ஜனாதிபதி மட்டுமே செயற்பட முடியும். இந்த நேரத்தில், ஜனாதிபதி அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதை நாட்டின் இருநூற்றி இருபது இலட்சம் மக்கள் சார்பாக முன்மொழிகிறோம்.' என்றார்.