web log free
November 25, 2024

சஜித் எழுப்பிய கேள்வியால் சபையில் சர்ச்சை!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று(21) கருத்து வௌியிட்ட போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்திய நிலையில் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

நாட்டின் பொருளாதார வங்குரோத்து நிலைமை தொடர்பில் அண்மையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கருத்து வௌியிட்டார்.

தீர்ப்பிற்கமைய குற்றவாளிகளுக்கு வழங்கப்படவுள்ள தண்டனை தொடர்பில் அவர் கேள்வியெழுப்பியமை குறிப்பிடத்தக்கதாகும்.

தான் முன்வைத்த விசேட கூற்றின் விபரங்கள் அடங்கியிருந்த கோவையை ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் பறித்துச் சென்றதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (21) குறிப்பிட்டார்.

நாட்டை வங்குரோத்து செய்ய உழைத்தவர்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி ராஜபக்ஷர்களிடம் இருந்து நட்டத்தை மீட்பீர்களா? என்றும் பாராளுமன்றத்தில் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

கேள்வி முன்வைக்கப்பட்ட போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், பாடசாலை மாணவர்களும் கலரியில் இருக்கின்றனர். ஆகையால், தொடர்ந்தும் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.  

இந்த சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார வீடியோ எடுத்தார். அவ்வாறு வீடியோ எடுக்க வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நளின் பண்டாரவிடம் கேட்டுக்கொண்டார்.

ஆளும் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி எதிர்க்கட்சித் தலைவர் தனது கேள்வியை முன்வைத்ததையடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து எதிர்க்கட்சித் தலைவரை அணுகினர்.

இதன்போது, படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ மற்றும் ஏனைய சேவிதர்கள், எதிர்க்கட்சித் தலைவரின் அருகில் வந்து அவரைப் பாதுகாப்பதைக் காணமுடிந்தது.

இதையடுத்து அவையை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மீண்டும் 11.14க்கு ஆரம்பித்தார்.

அப்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, என்னுடைய கையில் இருந்த ஆவணத்தை ஆளும் கட்சி உறுப்பினர் சனத் நிஷாந்த அபகரித்தார். அதனை, சமர விக்ரமவிடம் கொடுத்தார். அத்தனையும் பிரதமர் முன்னிலையிலேயே நடந்தது.

என்னுடைய கையில் இருந்த ஆவணத்தை இவ்வாறு அபகரிக்க முடியுமா? அல்லது 22/7இன் கீழ், சிறப்பு கூற்றொன்றை எனக்கு விடுவிக்க உரிமை இல்லையா? என்றும் வினவினார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd