web log free
November 25, 2024

டயானா கமகே விவகாரம், சபையில் சர்ச்சை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோரை ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றத்தில் இருந்து தடை செய்யுமாறு பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பான முதலாவது அறிக்கை இன்று (01) பாராளுமன்றத்தில் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த பிரதி சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கும் இந்த அறிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை பாராளுமன்றத்தில் இருந்து 3 மாத காலத்திற்கு தடை செய்யுமாறு பிரதி சபாநாயகர் குழு பரிந்துரை செய்திருந்த போதிலும், அறநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு அதனை ஒரு மாத காலத்திற்கு குறைத்துள்ளதாக சம்பவத்துடன் தொடர்புடைய ரோஹன பண்டார குற்றம் சுமத்தியுள்ளார். 

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியபோதும் சர்ச்சையான சூழ்நிலை ஏற்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அவைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோருக்கு இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றது. 

இதேவேளை, 3 கிரிக்கெட் மைதானங்களில் எல்இடி திரைகள் பொருத்தும் போது இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் உண்மைகளை வெளிப்படுத்தியதோடு, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் அதில் தலையிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd