web log free
December 23, 2024

தோட்டத் தொழிலாளர்கள் விடயத்தில் ஜனாதிபதி அதிரடி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கான கூட்டு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். 

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளமான 1700 ரூபாவினை வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அறியத்தருமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (08) முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி R.H.S.சமரதுங்க , பிரதேச பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர். 

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் பிரகாரம் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் தமது வேலைத்திட்டங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளுக்காக குழுக்களை நியமிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் குறித்து ஆலோசிக்க ஒரு குழுவை நியமிக்கவும், தோட்டத்தொழிலாளர்கள், பெருந்தோட்டக் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், இன்னுமொரு குழுவை நியமிக்கவும் இதன்போது முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd