web log free
November 25, 2024

பௌத்த தேரர்கள், உலகத் தமிழர் பேரவையின் மனோ எம்பி முன்வைத்த கோரிக்கை

இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற சிந்தனையும் மறைய வேண்டும். சகலருக்கும் சொந்தமான, இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, சிறந்த இலங்கைக்கான சங்க (பெளத்த) மன்றம், உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுடனான சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

எம்பிக்கள் ரவுப் ஹக்கீம், பெளசி, திகாம்பரம், வேலுகுமார், உதயகுமார், தவ்பிக் ஆகியோரும் கலந்துக்கொண்ட இந்நிகழ்வு பற்றி ஊடகங்களுடன் உரையாடிய மனோ எம்பி மேலும் கூறியதாவது,

சிங்கள-பெளத்த நாடு என்ற சிந்தனை, இலங்கையில் நிரந்தர அமைதி, வளர்ச்சி, மகிழ்ச்சி ஏற்பட தடையாக இருக்கிறது என சந்திப்பில் கலந்துக்கொண்ட தேரர்களை நோக்கி சிங்கள மொழியில் கூறினேன்.

அதேவேளை இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான தனித் தமிழ்நாடு என்ற சிந்தனையும் மறைய வேண்டும் என சந்திப்பில் கலந்துக்கொண்ட உலகத் தமிழர் பேரவை அங்கத்தவர்களை நோக்கி தமிழிலும், ஆங்கிலத்திலும் கூறினேன். உங்களது இந்த முயற்சியை நாம் வரவேற்கிறோம்.

அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை விலத்தி வைத்து விட்டு நேரடியாக நீங்கள் இந்த முயற்சி செய்வதும் இந்த முதற்கட்டத்தில் சரிதான். முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்து விட்டால், அடுத்த கட்டத்தில் அது அரசியல் கட்சிகளிடம்தான் வர வேண்டும். பாராளுமன்றத்தில்தான் இன்றைய சட்டங்கள் திருத்தப்பட முடியும். புதிய சட்டங்கள் உருவாக்கப்பட முடியும். ஆகவே அது வரும்போது வரட்டும். ஆனால், இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும்.

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான தனித் தமிழ்நாடு என்ற சிந்தனையும் மறைய வேண்டும்.

இந்த அடிப்படை ஆரம்ப புள்ளியாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் இந்த முயற்சிபயனற்றதாகி விடும். “76 விகிதம் சீனர்களை கொண்ட சிங்கப்பூர், அரசியல் சட்டப்படி தம்நாட்டு பன்மைத்துவத்தை கொண்டாட முடியும் என்றால், ஏன் இலங்கையில் எம்மால் அதை கொண்டாட முடியாது?” என்ற கேள்வியை முயற்சியில் ஈடுபடும் தேரர்களை நோக்கி நான் எழுப்பவில்லை.

ஏனெனில் இம்முயற்சி வெற்றி பெறுவது பெருமளவில் அவர்கள் தரப்பில்தான் உள்ளது என்பது எனது அபிப்பிராயம். முதலிலேயே அவர்களை தளர்வடையச்செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், அடுத்த முறை இதை நான் கேட்பேன். இத்தகைய கேள்விகளை ஏற்கனவே பாராளுமன்றத்திலும், உள்நாட்டு மேடைகளிலும் நான் பலமுறை எழுப்பியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd