web log free
April 20, 2024

மாத்தறை - பெலியத்த ரயில் சேவை ஏப்ரலில் ஆரம்பம்

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாத்தறை - பெலியத்த புகையிரத பாதையில் புகையிரத சேவை ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தப் பாதை நிர்மாணிக்கப்பட்ட பின்னர் இன்று வெள்ளோட்ட புகையிரத சேவை இடம்பெற்றது. இதுதொடர்பான நிகழ்வில் உரையாற்றுகையிலேயே போக்குவரத்து அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இதனை கூறினார்.

மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதையின் நிர்மாணப்பணிகள் மூன்று கட்டங்களின் இடம்பெறவுள்ளது.

இதன் முதற்கட்டத்தின் கீழ் இந்த பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 26 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட பாதை மாத்தறையில் இருந்து பெலியத்த வரையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு பணிகளுக்காக 278 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. சீன எக்ஸின் வங்கி இதற்கான நிதியினை வழங்கியுள்ளது.

இரண்டாம் கட்டமாக பெலியத்தயிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை 48 கிலோமீற்றர் தூரமும் மூன்றாம் கட்டமாக ஹம்பாந்தோட்டையிலிருந்து கதிர்காமம் வரையிலான 39 கிலோமீற்றர் தூரமும் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது.

இலங்கையில் மிக நீளமான சுரங்க ரயில் பாதை மாத்தறை – பெலியத்த பாதையிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 615 மீற்றர் நீளமான சுரங்கப்பாதையும் 268 நீளமான இரண்டு சுரங்கப் பாதைகளும் இங்கு அமைந்துள்ளது.

பல உப ரயில் நிலையங்களும் இதில் அமைக்கப்படடுள்ளன. மாத்தறைக்கும் கெக்னதுறவுக்கும் இடையில் ஒரு கிலோமீற்றர் தூரம் மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd