web log free
November 25, 2024

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை சரக்குக் கப்பல் சேவை மீண்டும்

எதிர்வரும் தைப்பொங்கலின் பின்னர் நாகப்பட்டினம் காங்கேசன்துறைக்கு இடையிலான சரக்குக் கப்பற்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 இந்தக் கப்பற்சேவைக்கான வளநிலைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் இந்தியாவில் இருந்து வர்த்தகப் பரிமாற்றத்துக்காக டொலரைப் பயன்படுத்தல், இந்தியாவில் இருந்து சில பொருள்களை இலங்கைக்குள் இறக்குமதி செய்தல், சுங்கம் சாதகமான பதிலை வழங்கினால் இந்திய ரூபாவில் வர்த்தம் செய்தல், முதலீட்டாளரின் நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கான கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், மண்ணெண்ணெய் இறக்குமதிக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதன் மூலம் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தல் தமிழ் மக்கள் நெருக்கடிகள் இல்லாமல் வாழ்வதற்குத் தேவையான பொருள்களை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வர்த்தகர் ஒருவர் இறக்குமதிக்கான விலைமனு கோரலை வழங்கியுள்ளார். 

கோரல்களைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஏற்றுமதி, இறக்குமதிக் கட்டணங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

கலந்துரையாடலில், யாழ். இந்தியத் துணைத்தூது வராலய அதிகாரி மனோஜ்குமார், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் மாவட்டச்செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்.மாவட்ட வர்த்தகர்கள், மறவன்புலவு சச்சிதானந்தன், சிவசேனை அமைப்பினர், இந்திய, இலங்கை வங்கிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd