பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ள 76ஆவது தேசிய சுதந்திர தின விழாவிற்கு சுமார் 20 கோடி ரூபா செலவாகும் என உள்துறை அமைச்சு மதிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு (2023) 75வது தேசிய சுதந்திர தின விழாவிற்கு 37 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
76வது தேசிய சுதந்திர தின விழா இவ்வருடம் காலி முகத்திடலில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலாச்சார கூறுகள் சேர்க்கப்படுமா என்பது குறித்து உறுதியான முடிவு எட்டப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு (2023) நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வுக்கு 3500 விருந்தினர்கள் அழைக்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டு 76 வது தேசிய சுதந்திர தின நிகழ்விற்காக இந்த எண்ணிக்கை 1000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்வருட நிகழ்வுக்கு 2500 விருந்தினர்கள் மாத்திரமே அழைக்கப்படவுள்ளனர்.
இந்த வருட தேசிய சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
தேசிய சுதந்திர தினத்தின் எதிர்வரும் செயற்பாடுகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை (05) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றது.