இன்று (15) அனுசரிக்கப்படும் சிறுவர் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
அங்கு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுராஜ் பெரேரா, 2021ஆம் ஆண்டில் 578 ஆண் குழந்தைகளும் 454 பெண் குழந்தைகளும் புற்றுநோய்க்கு ஆளானதாக பதிவாகியுள்ளதென தெரிவித்தார்.
அத்துடன், வருடாந்தம் 250-300 புற்று நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பதாக மஹரகம அபேஷா வைத்தியசாலையின் குழந்தைப் புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சஞ்சீவ குணசேகர தெரிவித்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இரத்தப் புற்றுநோயானது சிறுவர்களிடையே மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், புகைபிடித்தல் மற்றும் வெற்றிலை சாப்பிடுவதே பெரியவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் என்றும், ஆனால் குழந்தை பருவ புற்றுநோய்க்கு இதுபோன்ற குறிப்பிட்ட காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், வருடத்திற்கு 1,000 முதல் 1,200 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.