web log free
November 24, 2024

இலங்கை தமிழர் விடயத்தில் விஜய்யின் நிலைப்பாடு

தற்போது அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் இலங்கை தமிழ் மக்களை நாட வேண்டும் என்றால் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே அதனை செய்ய வேண்டும் என்று இந்தியாவின் மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தொடர்பில் இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

என்னைப் பொறுத்தவரையில், நடிகர் விஜய் அரசியல் உள்நுழைவதற்கான முடிவை எடுப்பதற்கு தள்ளப்பட்டார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் விஜய் அரசியலில் நுழைந்திருக்க வேண்டும்.

விஜய் அரசியலுக்கு வர முக்கிய காரணங்கள் இருக்கின்றன. விஜய்க்கு இரண்டு இடங்களில் இருந்து அழுத்தங்கள் வந்தன.

மத்தியில் பா.ஜ.க.வில் இருந்து விஜய்க்கு அழுத்தம் வந்தது. அதேபோன்று இங்கே தமிழகத்திலும் அவர் மீது பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

தி.மு.க வில் இளைய வாரிசு என்று திடீரென்று உதயநிதியை கொண்டு வந்து எதிர்கால முதல்வர் என்ற விம்பத்தை உருவாக்கி செயற்பட்டு கொண்டிருக்கின்றனர். அவர் கிட்டத்தட்ட சினிமாவின் முழு கட்டுப்பாட்டையும் தன்னகத்தே கொண்டிருப்பதாக தெரிகிறது.

அவரும் நடிகராக இருந்தவர். அவருக்கு இந்த விடயங்கள் தெரியும். சினிமாவில் இருக்கின்ற சகல பிரச்சினைகளையும் ஏறத்தாழ அவர் தான் கையாளுகின்றார் என்று தெரிகின்றது. இதில் விஜய்யின் படங்களும் உட்படுகின்றன.

மிகப் பிரமாண்டமான படங்களை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் என்ற நிறுவனமே வெளியிடுகின்றது. அப்படிப் பார்த்தால் சினிமா துறையிலும் விஜய்க்கு நெருக்கடி வருகின்றது.

இந்த நெருக்கடிகளை எப்படி முறியடிக்க முடியும் என்ற பின்னணியில்தான் விஜய்யின் அரசியல் பிரவேசம் அமைந்திருப்பதாக நான் கருதுகின்றேன்.

கேள்வி - விஜய் அரசியலில் பங்கெடுக்கும் போது அது இலங்கை தமிழ் மக்களுடனான அவரது உறவில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்?

இலங்கை தமிழ் மக்கள் நிச்சயமாக விஜய்யை நேசிக்கின்றார்கள். இதற்கு நான் பல இடங்களில் சான்று பகிர்வேன். விஜய்யின் ரசிகர்களை நான் முல்லைத்தீவில் பார்த்திருக்கின்றேன்.

மனம் சோர்ந்திருக்கின்ற மக்கள் கூட விஜய்யை நேசிக்கின்றார்கள். மக்களுக்கு விஜய்யின் மேல் நம்பிக்கை இருக்கின்றது. அந்த நம்பிக்கையை விஜய் எந்தளவு தூரம் காப்பாற்றுவார் என்பதே எனது ஆதங்கமாக இருக்கின்றது.

இலங்கை தமிழ் மக்களை நாட வேண்டுமென்றால் அந்த நாட்டின் அரசாங்கத்தின் ஊடாகவே அதனை செய்ய வேண்டும். எனவே இதனை விஜய் எவ்வாறு அணுகுவார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.

இது தொடர்பில் பெரிய மாற்றங்களை செய்யக் கூடிய இடத்தில் தான் விஜய் இருக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd