web log free
April 27, 2024

மனித உரிமை கண்காணிப்பகம் IMF இடம் முன்வைத்த கோரிக்கை

உத்தேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு மற்றும் கண்காணிப்பு சட்டமூலத்தை கைவிடுமாறும், இணையவழி பாதுகாப்புச் சட்டத்தை தடை செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளது.

மனித உரிமைகள் நியமங்கள் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் திருத்தம் செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிவில் சமூகத்தை கடுமையாக ஒடுக்கும் மற்றும் நாட்டில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் வகையிலான சட்டமூலங்களை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம், இலங்கையில் தனது வேலைத்திட்டத்தின் நம்பகத்தன்மையையும் வினைத்திறனையும் பாதுகாப்பதற்காக குறித்த உத்தேச சட்டமூலங்களை திருத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் பகிரங்க கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.