web log free
May 02, 2024

நாட்டில் ராஜபக்ஷக்கள் திருடிய பணத்தை ஏன் மீள வசூலிக்க முடியவில்லை

ராஜபக்சக்கள் நாட்டில் திருடியதன் காரணமாகவே ஏழையாகி விட்டோம். அந்த பணங்களை மீட்பதற்கான முறைமையை இன்று வரை காணவில்லை' என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இளைஞர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

‘தருண அபே உத்தம’ என்ற பெயரில் ‘ஐக்கிய இளைஞர் சங்கம்’ ஏற்பாடு செய்திருந்த சிநேகபூர்வ சந்திப்பின் போதே ஜனாதிபதியிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

ஜனாதிபதி பின்வருமாறு பதிலளித்தார்.

'நாங்கள் வாங்கிய கடனைப் பார்க்கும்போது, உலகப் பணக்காரரிடம் போனாலும், அந்த வேலையைச் செய்ய முடியும் என்று நினைக்கவில்லை. இவ்வளவு கடன் வாங்கியிருக்கிறோம். எனவே இலங்கையில் இருந்து எடுத்த பணத்தை மீளப் பெற்றுக் கொண்டு இதனைத் தீர்க்கலாம் என ஓரிருவர் கூறினால் அது முற்றிலும் பொய்யானது.

ஒரு நாடாக நாம் பாரியளவு கடனைப் பெற்றுள்ளோம். இந்த கடனை செலுத்த 2042 வரை கால அவகாசம் கேட்டுள்ளேன். எனவே ஓரிருவர் பணத்தைத் திரும்பப் பெற்று இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று யாராவது கூறினால் அது முற்றிலும் தவறானது.

மேலும், தற்போது புதிய ஆணைக்குழுவை நியமித்துள்ளோம், யார் வேண்டுமானாலும் அங்கு சென்று தகவல்களை வழங்க முடியும். அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் இதனை செயற்படுத்தியுள்ளோம். வழக்குத் தொடரக்கூடியவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. மற்றவர்களின் சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. இது தொடர்பான உண்மைகளை யார் வேண்டுமானாலும் புதிய ஆணையத்திடம் தெரிவிக்கலாம். அந்த விவகாரங்களில் அரசு தலையிடாது.

மேலும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக நானும் உழைத்து வருகிறேன். அதற்காக பல வழக்குகள் போட்டுள்ளோம். அத்துடன், சுயாதீன ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான பயிற்சிக் குழுக்கள் போதுமானதாக இல்லாததால், வெளிநாடுகளிலும் தேவையான ஆதரவைக் கோரப்பட்டுள்ளது.

நாட்டின் பணத்தை மோசடி செய்தவர்களை தண்டித்து பணத்தை மீட்பதுடன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த இரண்டு பிரச்சினைகள் வேறு என்பதை நாம் எப்போதும் உணர்ந்து அவற்றைக் கையாள வேண்டும்.