வடக்கிலும் ஏனைய மாகாணங்களிலும் உள்ள தமிழ் மக்களின் முறைப்பாடுகளை உடனடியாக தீர்க்கும் வகையில் பொலிஸ் 107 அவசர அழைப்பு நிலையம் (16) வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோர் தலைமையில் இது திறந்து வைக்கப்பட்டது.
தமிழ் மக்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் தமிழில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் இந்த பிரிவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முதல் இந்த சேவையை 107 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். இங்கு உரையாற்றிய அமைச்சர் டிரான் அலஸ்,
உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் தடைகள், சதிகள் இருந்தாலும் புதிய பொலிஸ் மா அதிபர் அகற்றப்பட மாட்டார் என்றும் நீதி நடவடிக்கையை அவ்வாறே முன்னெடுத்துச் செல்வதாகவும் கூறினார்.
அத்துடன், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வடக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்ததுடன், எதிர்காலத்தில் நீதி நடவடிக்கையை அமுல்படுத்தி வடக்கில் போதைப்பொருளை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.