web log free
May 02, 2024

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான மூவர் விரைவில் இலங்கைக்கு

முருகன்,ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் இவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், லண்டனில் உள்ள தனது மகளுடன் சென்று வசிப்பதற்கு ’விசா’ எடுக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் என்பதால், தனக்கு உரிய அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குனருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும், மூன்று பேரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறினார்.