எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டுக்கு கொண்டுவர தான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று (01) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
“நாம் ஒரு தேசம் என்ற வகையில் சுதந்திரத்தை பெற்றுக்கொண்டபோதும் பொருளாதார சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள முடியாதிருப்பது அரசாங்கத்தின் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை இடம்பெறும் ஊழல் மோசடிகளே காரணமாகும்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்களை பிழையாக வழிநடத்தி சில ஊடகங்கள் மேற்கொண்டுவரும் போலிப் பிரச்சாரங்கள் பற்றி கவலை அடைவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் குழப்பமான நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டிருப்பது இந்த குறுகிய நோக்கம் கொண்ட சந்தர்ப்பவாதிகளின் போலிப் பிரச்சாரங்களின் காரணத்தினாலேயாகும் என்றும் நாட்டுக்காக ஊடகங்களுக்கும் முக்கிய பொறுப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.
இரண்டாவது தடவையாகவும் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துள்ள நரேந்திர மோடி ஒரு வார காலத்திற்குள் தமது கோரிக்கையின் பேரில் இலங்கைக்கு வருகை தருவது பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில் மிகவும் குறுகிய காலத்தில் அமைதியான சூழலொன்றை ஏற்படுத்துவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்திருப்பது பற்றி தனது மகிழ்ச்சியை வெளியிடும் வகையிலாகும் என்றும் குறிப்பிட்டார்.