web log free
May 08, 2024

புது வருடத்தின் பின் நாட்டில் எதிர்பாராத அரசியல் மாற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நிலவும் அரசியல் முரண்பாடுகள் காரணமாக எதிர்வரும் புத்தாண்டின் பின்னர் நாட்டில் பல அரசியல் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசில் ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதலில் பொதுத் தேர்தலை நடத்த விரும்பினாலும், முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அண்மையில் அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார்.

பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு ஜனாதிபதி இணங்கவில்லை என்றால், பொதுத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் முன்மொழிவதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில், பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், பசில் ராஜபக்ஷவும், அக்கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பொதுஜன பெரமுன செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர் குழு கருத்து வெளியிட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சுப் பதவிகளை வகிக்காத பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று, கட்சியின் வேலைத்திட்டத்தினால் ஏமாற்றமடைந்து, எதிர்காலத்தில் எதிர்க்கட்சியில் இணையத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குழுவொன்று கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாகவும், அதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைவதற்கு அவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்டோர் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான புதிய கூட்டணியில் இணைந்து ஜனாதிபதிக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.