web log free
April 22, 2025

இதொகாவின் காடைத்தன வன்முறை முயற்சிகளுக்கு பெயர் தொழிற்சங்க போராட்டமல்ல..!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க போராட்டம் நடத்துவதாக சொல்லி ரவுடித்தனம், காடைத்தனம் செய்கின்றதா என்று கேட்க விரும்புகிறேன்.

தனது அரசாங்கத்தின் கூட்டணி கட்சியான இந்த தொழிற்சங்கத்துக்கு பொது வெளி போராட்டங்களின் போது மது போதையை தவிர்த்து, ஒழுக்கத்துடன், சட்டம் ஒழுங்கை கடை பிடிப்பது பற்றி அறிவுரை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொள்ளவும் விரும்புகிறேன்.

இதுபற்றி சற்று முன் சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் டிரான் அலசிடம் உரையாடி, இந்த வன்முறை காடையர்கள், வேலுகுமார் எம்பியை வன்முறையில் கொல்லப்பட்ட எம்பி அமரகீர்த்தியின் நிலைமைக்கு தள்ளிவிட முயல்கிறார்களா என்று கேட்டேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். 

கண்டி புசல்லாவையில் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி எம்பி வேலு குமார் மீது, இதொகா அங்கத்தவர்கள் மேற்கொண்ட தாக்குதல் முயற்சி பற்றி இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,   

இதொகாவின் சிரேஷ்ட உபதலைவர் என்று சொல்லப்படும் செல்லமுத்து என்பவர் மற்றும் அவரது மகன்கள் என்று சொல்லப்படும் நபர்கள் தொழிற்சங்க போராட்டம் என்ற பெயரில், நேற்று கண்டி மாவட்ட புசல்லாவையில், தனது தொகுதி மக்கள் பணி தொடர்பில் பயணித்த எமது தமுகூ கண்டி மாவட்ட எம்பி வேலுகுமாரை தாக்க முயன்று, தூஷண வார்த்தைகளால் பேசி, பயமுறுத்தல் விடுத்துள்ளார்கள். இது தொடர்பான காணொளி தற்போது பொது வெளியில் பரவலாக உள்ளது. 

இந்நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க போராட்டம் நடத்துவதாக சொல்லி காடைத்தனம் செய்கின்றதா என்ற கேள்வி இயல்பாக எழுகின்றது. இவர்களின் இந்த போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் தொழிற்சங்க போராளிகள் அல்ல, ரவுடித்தனம் செய்யும் மது போதை காடையர்கள் என்ற என்ற பதிலும் இயல்பாக கிடைகின்றது. 

இது தொடர்பில் வேலுகுமார் எம்பியை, கண்டி சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபரிடம் முறையீடு செய்யும்படியும், நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பும்படியும் கூறியுள்ளேன். மேலும் இதுபற்றி சற்று முன் சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் டிரான் அலசிடம் உரையாடி, இந்த வன்முறை காடையர்கள், வேலுகுமார் எம்பியை வன்முறையில் கொல்லப்பட்ட எம்பி அமரகீர்த்தியின் நிலைமைக்கு தள்ளிவிட முயல்கிறார்களா என்று கேட்டேன்வன். வேலுகுமார் எம்பியை தூஷண சொற்களை பயன் படுத்தி பேசி, பயமுறுத்தி, ஒரு மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அவரை தனது கடமைகளை செய்ய விடாமல் தடுத்த நபர்களின் அடையாளங்கள் காணொளியில்  உள்ளன. அதன்படி அவர்களை உடன் கைது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியுள்ளேன். 

1,700 ரூபா நாட்சம்பளம், பத்து பேர்ச் காணி, தனி வீடு, பல்கலைக்கழகம் என்று வரிசையாக மக்களுக்கு வாக்குறுதிகள் அளித்து விட்டு, அவற்றை இந்த திகதிக்குள் பெற்று தருவோம் என்று காலகெடுவையும் அறிவித்து விட்டு, இன்று சொன்னபடி எதையும் நிறைவேற்ற முடியவில்லை என்பதால், இயலாமை என்ற விரக்தி உணர்வால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தடுமாறுகிறது. இந்த தோல்விகளுக்கு நாம் காரணம் அல்ல.

தமிழ் முற்போக்கு கூட்டணி, சம்பள நிர்ணய சபையிலும், கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையிலும் அங்கம் வகிக்கவில்லை. எனினும் இந்நிலையிலும் கூட நாம், தொழிற்சங்க போராட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயாராகவே உள்ளோம்.  அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. 

ஆனால், சம்பள நிர்ணய சபையிலும், கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையிலும் ஏற்கனவே தம்முடன் கூட அமர்ந்து பேசும் வேறு பல தொழிற்சங்கங்களுக்கு கூட அறிவிக்காமல் போராட்டங்களை  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தன்னிச்சையாக நடத்துகிறது என அந்த தொழிற்சங்கங்களே தெரிவிக்கிறார்கள்.  இத்தகைய தவறுகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தவிர்க்க வேண்டும். சரியான திட்டமிடம் இன்மையால் வன்முறை தலை தூக்குகிறது. இதற்கு எக்காரணம் கொண்டும் நாம் இடமளிக்க முடியாது.    

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd