web log free
November 24, 2024

ஈரான் ஜனாதிபதி இலங்கையில்

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைஸி மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்தை வந்தடைந்தடைந்தார். இவரை பிரதமர் தினேஷ் குணவர்த்தன வரவேற்றார். 

ஈரானின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் ஈரான் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். 

இதன் மூலம் மொனராகலை மாவட்டத்தில் 4500 ஹெக்டயர் புதிய விவசாய நிலங்களுக்கும் தற்போதுள்ள 1500 ஹெக்டயர் விவசாய நிலங்களுக்கும் நீர்ப் பாசன வசதி கிடைக்கும்.

அத்தோடு பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை பிரதேசங்களின் குடிநீர் மற்றும் தொழிற்சாலை நீர் தேவைகளுக்கு 39 மில்லியன் கன மீற்றர் (MCM)நீரையும் வழங்க முடியும். இதனால் வருடாந்தம் 290 ஜிகாவாட் (290 GWh) மின்சாரத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்பிற்கு வழங்க முடியும்.

இத்திட்டத்தில், புஹுல்பொல மற்றும் டயரபா உள்ளிட்ட இரு நீர்த்தேக்கங்களை இணைக்கும் 3.98 கி.மீ நீளமான நீர்ச் சுரங்கம் (இணைப்பு சுரங்கப்பாதை), 15.2 கி.மீ நீளமான நீரோட்ட சுரங்கப்பாதை, நிலக்கீழ் மின் நிலையம், சுவிட்ச் யார்ட், பயணப் பாதை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய கட்டுமானங்களும் உள்ளடங்கியுள்ளன.

 514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த ஒப்பந்தம் 2010 மார்ச் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது. ஈரானின் ஏற்றுமதி மேம்பாட்டு வங்கி (EDBI) 2013 வரை 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது.

இருப்பினும், அந்த நேரத்தில் ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்ட சர்வதேச தடைகள் காரணமாக அவர்களால் இத்திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியளிக்க முடியாமல் போனது. பின்னர் இலங்கை அரசாங்க நிதியைப் பயன்படுத்தி, ஒப்பந்தக்காரரான பராப் நிறுவனத்துடன், திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கைக்கான விஜயத்தில் ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைஸிக்கு பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd