web log free
May 06, 2025

கம்பனிகளுடன் எவ்வித சமரசமும் கிடையாது! இ.தொ.கா தலைவர் திட்டவட்டம்

 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்து அரச வர்த்தமானி வெளியிடப்பட்டதையடுத்து பெருந்தோட்ட நிறுவனங்கள் அதை வழங்க மறுப்பு தெரிவித்துவரும் நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கம்பனிகளுடன் எந்தவித சமரசமும் கிடையாது என ஊடகங்களுக்கு திட்டவட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். 

முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தோட்ட தொழிலாளர்களுக்கு 1200 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்ததயடுத்து, அதற்கு மறுப்பு தெரிவித்து, செந்தில் தொண்டமான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த பொழுது சம்பள உயர்வு வழங்க முடியாது என ஆரம்பத்தில் கம்பனிகள் தெரிவித்து வந்தன. கடும் அழுத்தத்திற்கு பிறகு ஊக்குவிப்பு தொகை மாத்திரம் வழங்க தயார் என தெரிவித்தனர்.

இந்நிலையில், அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதை அடுத்து, வேறு வழியின்றி தற்போது கம்பனிகள் 1200 ரூபா அடிப்படை சம்பளம் வழங்க முன்வந்துள்ளனர். ஒரு வருட காலமாக ஒரு ரூபாய் சம்பள உயர்வு கூட வழங்க முடியாது என தெரிவித்த கம்பனி,தற்போது 200 ரூபாய் அதிகரிப்பு வழங்க முன்வந்தமைக்கான காரணம் அரசாங்கத்தால் அரச வர்த்தமானி வெளியிடுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

ஆதலால் கம்பனிகளுடன் எவ்வித சமரசமும் கிடையாது என செந்தில் தொண்டமான் தெரிவித்ததுடன்,அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை கம்பனி அமுல்படுத்தாவிடின் கம்பனியின் முதன்மை இயக்குனர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd