எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக103 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 44மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறை வேற்றப்பட்டது. அரசு மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த 62 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
விவாத முடிவில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. யும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.வாக்கெடுப்பைக் கோரினார்.
இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அரசாங்கத்துடன் இணைந்து சுயாதீன எதிரணி எம்.பி.க்களான அலி சப்ரி ரஹீம்,,ஜோன் செனவிரத்ன அநுர பிரியதர்சன யாப்பா,பிரியங்கர ஜயரத்ன நிமல் லான்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான பௌசி ஆகியோர் வாக்களித்தனர்
இந்த வாக்கெடுப்பை தமிழ் தேசியக்கூட்டமைப்பு ,தமிழ் தேசிய மக்கள் முன்னணி , தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் புறக்கணித்திருந்தன. அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்,தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா ஆகியோரும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.