நீதி நடவடிக்கை என்பது தற்காலிக நடவடிக்கையல்ல என்றும், போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் இந்த நாட்டிலிருந்து இல்லாதொழிக்கும் வரை போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்திற்கு எதிராக தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்கும் போதைப்பொருள் வலையமைப்பில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கும் நேற்று (04) இடம்பெற்ற “ஒப்பரேஷன் ஜஸ்டிஸ்” விசேட நடவடிக்கை வேலைத்திட்டத்தின் கீழ் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், பொலிஸ் பிரிவு மட்டத்தில் இரகசிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், தமக்கு தெரிந்த போதைப்பொருள் தொடர்பில் இலங்கை பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் பொலிஸ் மா அதிபர் பொதுமக்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
கைத்துப்பாக்கிகள், ரிவால்வர்கள், பிளின்ட்லாக் போன்ற ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்படும் குற்றங்களைத் தடுப்பதற்கு பொதுமக்களின் உதவி தேவைப்படுவதாகவும், அத்தகைய தகவல்களை வழங்கினால் இலட்சக்கணக்கான ரூபாய் ரொக்கப் பரிசாக வழங்குவதற்கும் பொலிஸார் தயாராகவுள்ளதாகவும் பாதாள உலகத்தை துரத்த அவர்களுக்கு புரியும் மொழியில் பதில் சொல்லும் வகையில் பொலிசார் செயல்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.