வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான 2 மாத சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளை மாத்திரமே வழங்க முடியும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தாங்கள் பணிக்கு சமூகமளிக்காத நாட்களை விடுமுறை நாட்களாகக் கருதுவதுடன் அபராதம் இன்றி மீண்டும் பணிக்கு சமூகமளிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட தொழில் நடவடிக்கை இன்றுடன் 66 நாட்களை கடந்துள்ளது.
இதேவேளை, அரச சேவையாளர்கள் பலர் எதிர்வரும் 9ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் அன்றைய தினம் சுகயீன விடுமுறை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.