web log free
September 08, 2024

மீண்டும் ஹிருணிகாவுக்கு ஏமாற்றம்

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் இன்று (11) கொழும்பு மேல் நீதிமன்றில் எழுத்து மூலம் தனது ஆட்சேபனையை சமர்ப்பித்துள்ளார்.

இந்த பிணை கோரிக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று (11)அழைக்கப்பட்ட போது, அரசாங்க சட்டத்தரணியால் இந்த ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன.

அதன் பின்னர், ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணைக் கோரிக்கை மீதான விசாரணை எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறும் என நீதிபதி உத்தரவிட்டார்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி, தெமட்டகொடை பிரதேசத்தில் கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க என்ற இளைஞனை கறுப்பு நிற டிஃபென்டர் வாகனத்தில் கடத்திச் சென்று, தடுத்து வைத்து தாக்கியதாக முன்வைக்கப்பட்ட 18 குற்றச்சாட்டுக்களில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், மேன்முறையீடு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி அவர் இந்த பிணை கோரிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

Last modified on Thursday, 11 July 2024 16:16