எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் ஆகஸ்ட் 15ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகம் அமைந்துள்ள சரண மாவத்தையைச் சுற்றியுள்ள பகுதி விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்றைய தினம் மக்கள் வேலைக்காகவோ அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக அந்தப் பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.
தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி இம்மாதம் 15ஆம் திகதி காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11.30 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்தல் வேட்பாளர்களுக்கு, சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் பிற கட்சிகளின் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு, அதன் பின்னரே நடைபெறுகிறது. இதன் போது தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகம் அமைந்துள்ள சரண மாவத்தையை சூழவுள்ள பகுதி விசேட பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே அந்த இடத்திற்கு செல்ல முடியும். எனவே சரண மாவத்தையை சுற்றியுள்ள அரச அலுவலகங்கள் மற்றும் வைத்தியசாலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி மூடப்படவுள்ளதால் பொது வியாபாரம் அல்லது ஏனைய நடவடிக்கைகளுக்காக மக்கள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது. வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதும், வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணியை தொடங்க உள்ளோம்.
இதேவேளை, நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 320 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.