web log free
April 21, 2025

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த சிறீதரன் எம்பி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் அரியநேத்திரன் சந்தித்து கலந்துரையாடினார்.

சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி என்ன முடிவை எப்போது எடுத்தாலும் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். கட்சி என்ன முடிவை எடுக்கிறதோ எடுக்கவில்லையோ அது எவ்வளவு தூரம் எம்மை தள்ளப்போகிறதோ என்பதை தமிழ் மக்கள் தீர்மானிப்பார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக எனது ஆதரவு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும். தமிழ் மக்கள் காத்திரமான ஒரு செய்தியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அரியநேத்திரன், தான் களமிறங்கும் சங்கு சின்னத்தை சிபாரிசு செய்தவர் சிறீதரன் எம்பி என தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் தமக்காக குறியீடாக சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd