web log free
November 23, 2024

தமிழர் வாக்கு ஜேவிபி கட்சிக்கு இல்லை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழீழ விடுதலை இயக்கம் ஒருபோதும் ஆதரிக்காது. நாம் மூவர் ஜனாதிபதியை சந்தித்ததாக எம் மீது சேறு பூச முனைகிறார்கள். அத்துடன் ஜே.வி.பி.யினர் தமிழர்களின் அடித்தளத்தையே உடைத்து வடக்குக் கிழக்கை பிரித்தவர்கள். அவர்களுக்கும் தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கநாதன் தெரிவித்தார்.

 வவுனியாவில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் பொது வேட்பாளருக்கு உரிய ஆதரவுதளம் அதிகரித்து வருகின்றது. எமது மக்கள் எமது இலட்சிய பாதையிலே பொது வேட்பாளருக்கு கட்டாயம் வாக்களிப்பார்கள் என கருதுகிறேன். 

மேலும் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் பொது வேட்பாளர் விடயம் தொடர்பாக எதிராக கூறும் கருத்துக்கள் அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். எங்களுடைய கட்சி ஒரு ஜனநாயக ரீதியான கட்சியாகும். ஆகவே அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். எமது கட்சியினை பொறுத்தவரை ஒரு முடிவினை எடுத்துள்ளது. 

மேலும் பொதுக்கட்டமைப்பில் பேச்சுவார்த்தைக்கு செல்வது தொடர்பாக ஒரு குறிப்பிட்ட நேரம் வரையே கலந்துரையாடல் இடம்பெற்று இருந்தது. 

குறிப்பாக தனித்தனியாக செல்வதை விடுத்து சேர்ந்து செல்வது. அத்துடன் அவர்களுடைய கடிதத்தில் என்னென்ன வலியுறுத்தப்பட்டுள்ளதோ அதன் பிரகாரம் ஒரு முடிவினை எடுத்து செல்வது என்பது தொடர்பாகவும் நாங்கள் ஒரு தீர்மானம் எடுத்துள்ளோம். 

அனுரகுமாராவின் தேர்தல் விஞ்ஞானத்திலே பாதுகாப்பு படை தொடர்பாகவும் குறிப்பாக மனித உரிமை மீறல்களை செய்தவர்களை காப்பாற்றுவது தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

இவர்கள்தான் வடக்கு கிழக்கை பிரித்தவர்கள். என்னைப் பொருத்தவரை எங்கள் மக்கள் அனுரவை பற்றி சிந்திக்கவில்லை என்பதுதான் உண்மை. 

அனுர தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனது கருத்துக்களை தெரிவித்தாலும் கூட எங்களது அடித்தளத்தை உடைத்து எறிந்தவர்கள் ஜேவிபியினரே. இணைந்த வடக்கு கிழக்கிற்காக எங்களுடைய போராளிகள், இயக்கங்கள் எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்கள். அதனை உடைத்த பெருமை ஜேவிபினருக்கு இருக்கின்றது. 

அவர்கள் என்னதான் தேனும், பாலும் ஓடுமென்று கூறினாலும் கூட அவர்களுக்கு தமிழர் பகுதிகளில் வாக்கு போடுவது என்பது கடினமாகத்தான் இருக்கும்.  

தமிழ் மக்களும் தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகளும் ஒர் அணியில் திரள வேண்டும் என்பதுதான் பிரதான நோக்கமாக இருக்கின்றது. 

பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி தேர்தலில் எமது தமிழ் சமூகம் ஒரு குடையின் கீழ் அணி திரண்டு இருக்கின்றது. இதனை செய்தியாக்க வேண்டும் என்பதுதான் நமது சங்கு சின்னத்தின் நோக்கமாக இருக்கின்றது. 

எமது மனங்களிலே நீறு பூத்த நெருப்பாக எமது விடுதலை வேட்கை இருக்கின்றது. இந்நிலையில் நமது சங்கு சின்னத்தின் ஊடாக தென்னிலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் நாங்கள் எல்லோரும் ஒன்றாக நிற்கின்றோம் என்ற செய்தியை சொல்ல வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக இருக்கின்றது. 

தமிழீழ விடுதலை இயக்கம் ஒரு முடிவெடுத்தால் அதிலிருந்து பின்வாங்காது. ஜனாதிபதியை நாங்கள் மூவரும் சந்தித்தது தொடர்பாக நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் சூழல் ஏற்படுமா என்று பலபேர் எம் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தினர் மக்களுடைய சிந்தனையின் அடிப்படையில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என எண்ணுபவர்கள். எந்த நிலையிலும் தென் இலங்கை வேட்பாளர்களுக்கு விரல் நீட்டுகின்ற நிலை ஏற்படாது என்று தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd