ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் 15 பேர், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கென தெரிவித்து பலரிடம் பணம் மற்றும் இதர உதவிகளை பெற்றுவருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதுதொடர்பில் ஆராய்ந்து வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் 38 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வேட்பாளர்கள் பலர் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வேட்பாளர் ஒருவருக்கு தேர்தல் ஆணைக் குழுவால் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளோரில் 15 பேர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளெனத் தெரிவித்து பலரிடம் பணம் மற்றும் இதர உதவிகளை பெற்றுவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள சுமார் 30 பேர் இதுவரை பிரசார நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை. சிலர் கட்சி அலுவலகங்களைக்கூட இன்னும் திறக்கவில்லை.
அத்தோடு, வேறொரு வேட்பாளருக்காக பிரசாரங்களை மேற்கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்காக தேசிய தொலைக்காட்சி மற்றும் வானொலியில் தமது கொள்கை விளக்கவுரையை வெளியிடுவதற்கு வழங்கும் இலவச நேரத்தை அவர்களுக்கு வழங்காமல் இருப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.