web log free
December 22, 2024

இலங்கை மீது பிரித்தனியா கரிசனை

இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதையும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதையும் முன்னிறுத்தி பிரிட்டன் தொடர்ந்தும் கரிசனையுடன் செயலாற்றிவருவதாகத் தெரிவித்திருக்கும் அந்நாட்டு இந்தோ – பசுபிக் விவகார அமைச்சர் கத்ரின் வெஸ்ட், எதிர்வருங்காலத்தில் தடை விதிக்கப்படக்கூடிய பதவிகள் குறித்த யூகங்களை வெளியிடுவதானது, அத்தடைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்துவிடும் என சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியின் வெற்றியை அடுத்து, புதிய பிரதமராகத் தெரிவான கெய்ர் ஸ்டார்மருக்கு வாழ்த்துத்தெரிவித்து பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தது. அக்கடிதத்தில், ‘எதிர்வரும் செப்டெம்பர்மாத (நடைபெற்றுமுடிந்த) ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான முன்னைய தீர்மானம் மேலும் இருவருடங்களுக்கு நீடிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்த்திச்செல்வதற்கும் அவசியமான நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கவேண்டும்’ என வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி, ‘இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பிரிட்டனில் நடைமுறையில் உள்ள உலகளாவிய மனித உரிமைகள்சார் தடைகள் சட்டம் போன்ற சகல விதமான தடைகளையும் விதிப்பதற்குப் பின்நிற்கக்கூடாது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு எதிராக அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் சொத்து மற்றும் பயணத்தடைகளை விதித்துள்ளன. எனவே உலகளாவிய மனித உரிமைகள் கடப்பாட்டுக்கு அமைவாக அமெரிக்கா மற்றும் கனடாவைப் பின்பற்றி பிரிட்டனும் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைகளை விதிக்க முன்வரவேண்டும்’ என்றும் அக்கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.

அக்கடிதத்துக்குப் பதிலளித்து பிரிட்டனின் இந்தோ – பசுபிக் விவகார அமைச்சர் கத்ரின் வெஸ்ட் கடந்த 4 ஆம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவைக்கு பதில் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார். அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை தொடர்பில் நீங்கள் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி பிரதமருக்கு அனுப்பிவைத்த கடிதத்துக்கு இந்தோ – பசுபிக் விவகார அமைச்சர் என்ற ரீதியில் பதிலளிக்கிறேன்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளடங்கலாக மனித உரிமைகளுடன் தொடர்புடைய பரந்துபட்ட கரிசனைகள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பிரிட்டன் தொடர்ச்சியாக இணைந்து செயற்பட்டுவருகிறது. செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் வெளியிட்ட அறிக்கையிலும் எமது கரிசனைகள் குறித்து தெளிவாக வெளிப்படுத்தியிருந்தோம்.

இலங்கை விவகாரத்தைப் பொறுத்தமட்டில் பிரிட்டன் அரசாங்கமானது ஏனைய இணையனுசரணை நாடுகளுடன் இணைந்து இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த பல வருடகாலமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக சர்வதேச மட்டத்தில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. கடந்த ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி பிரிட்டனின் தலைமையில் கொண்டுவரப்பட்ட 57/1 தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் சர்வதேசத்தின் பங்கேற்புடனான நிகழ்ச்சித்திட்டமொன்று தொடர்வதற்கு இத்தீர்மானம் வழிகோலியிருக்கிறது. மிகமுக்கியமாக இத்தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டுவதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் அளிக்கப்பட்டிருந்த ஆணையைப் புதுப்பித்திருக்கிறது.

மேலும் தடைகளை விதிப்பது என்பது மிகமோசமான மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்கான ஏனைய பல இராஜதந்திர உத்திகளில் ஒன்றாகும். எதிர்வருங்காலத்தில் தடை விதிக்கப்படக்கூடிய பதவிகள் குறித்த யூகங்களை வெளியிடுவதானது, அத்தடைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைக்கும் என்பதால், அவ்விபரங்களை வெளியிடுவது பொருத்தமானதாக அமையாது என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd