இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதையும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதையும் முன்னிறுத்தி பிரிட்டன் தொடர்ந்தும் கரிசனையுடன் செயலாற்றிவருவதாகத் தெரிவித்திருக்கும் அந்நாட்டு இந்தோ – பசுபிக் விவகார அமைச்சர் கத்ரின் வெஸ்ட், எதிர்வருங்காலத்தில் தடை விதிக்கப்படக்கூடிய பதவிகள் குறித்த யூகங்களை வெளியிடுவதானது, அத்தடைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்துவிடும் என சுட்டிக்காட்டியிருக்கிறார்.
பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியின் வெற்றியை அடுத்து, புதிய பிரதமராகத் தெரிவான கெய்ர் ஸ்டார்மருக்கு வாழ்த்துத்தெரிவித்து பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தது. அக்கடிதத்தில், ‘எதிர்வரும் செப்டெம்பர்மாத (நடைபெற்றுமுடிந்த) ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான முன்னைய தீர்மானம் மேலும் இருவருடங்களுக்கு நீடிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நோக்கி நகர்த்திச்செல்வதற்கும் அவசியமான நடவடிக்கைகளை பிரிட்டன் முன்னெடுக்கவேண்டும்’ என வலியுறுத்தப்பட்டிருந்தது.
அக்கடிதத்துக்குப் பதிலளித்து பிரிட்டனின் இந்தோ – பசுபிக் விவகார அமைச்சர் கத்ரின் வெஸ்ட் கடந்த 4 ஆம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவைக்கு பதில் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார். அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளடங்கலாக மனித உரிமைகளுடன் தொடர்புடைய பரந்துபட்ட கரிசனைகள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பிரிட்டன் தொடர்ச்சியாக இணைந்து செயற்பட்டுவருகிறது. செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரில் வெளியிட்ட அறிக்கையிலும் எமது கரிசனைகள் குறித்து தெளிவாக வெளிப்படுத்தியிருந்தோம்.
மேலும் தடைகளை விதிப்பது என்பது மிகமோசமான மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்கான ஏனைய பல இராஜதந்திர உத்திகளில் ஒன்றாகும். எதிர்வருங்காலத்தில் தடை விதிக்கப்படக்கூடிய பதவிகள் குறித்த யூகங்களை வெளியிடுவதானது, அத்தடைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைக்கும் என்பதால், அவ்விபரங்களை வெளியிடுவது பொருத்தமானதாக அமையாது என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது