web log free
April 18, 2025

தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை

வடக்கு – கிழக்குப் பகுதிகளில், அதிகளவு தமிழ்ப் பொலிஸாரை நியமிப்பதற்கு சிறப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பொலிஸ் வெற்றிடங்கள் தமிழ்ப் பொலிஸாரை வைத்து மிக விரைவாக நிரப்பப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது;

இலங்கையின் அனைத்துப் பகுதிகளைப் போலவே வடக்கிலும் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் பொலிஸாரால் பணியாற்ற முடியும்.

கடந்த காலங்களைப் போல் அல்லாமல், பொலிஸாரின் சுதந்திரமான செயற்பாட்டை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்.

சட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதற்குப் பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரம் உண்டு. சட்டத்தின் அடிப்படையில் செயற்படும்போது பொலிஸாருக்கு ஏதேனும் அழுத்தம் முன்வைக்கப்பட்டால், அது தொடர்பில் எனக்குத் தெரிவியுங்கள். நிச்சயம் நான் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வேன்.

தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடக்கு – கிழக்கில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அத்துடன், வடக்கில் நிலவும் இதர பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd