web log free
December 15, 2025

SJB - UNP இணைவு சாத்தியப்படும் வாய்ப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கூட்டிணைந்து செயற்படுவதற்காக சாதகமான சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் மீண்டும் இணைந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக இருந்து வருகின்றன.

விசேடமாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும்  இணைய வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் மீண்டும் தாய்க் கட்சிக்கு வருவதற்கு தயாராக உள்ளனர். எனினும் அவர்கள் தங்களின் பிரதிநிதித்துவம் சம்பந்தமாக சிந்திக்கின்றார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைகின்றபோது தேர்தல் வெற்றிகள் உள்ளிட்டவை சாதகமாக அமையும் என்பதை நடைபெற்று முடிந்த கூட்டுறவுத்துறைக்கான தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த நிலைமையில் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்கள் மீண்டும் இருதரப்பும் இணைந்து கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.

அதன் ஒரு வெளிப்பாடாகவே கடுவல தொகுதியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மீள் இணைவு காணப்படுகின்றது.

எனவே கட்சியின் அங்கத்தவர்களின் நிலைப்பாடுகளை கட்சிகளின் தலைவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் கூட்டிணைவது குறித்து பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆகவே, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக சாதகமான முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை வெகுவாக உள்ளது. அதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd