web log free
April 27, 2025

அதிரடி நடவடிக்கையில் குதித்த மஹிந்த!

தனது பாதுகாப்புப் பிரிவை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவொன்று பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

முறையான பாதுகாப்பு மதிப்பீடு இல்லாமல், தனது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட மெய்ப்பாதுகாவலர்கள் குழுவிலிருந்து 60 அதிகாரிகள் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும், மற்ற அனைவரும் நீக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தனது சட்டத்தரணிகள் ஊடாக  தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தனது பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை என்றும், தனது பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் மூன்று தசாப்தங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர தலைமை தாங்கி தான் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் ஒருவர் எனவும், மேலும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் தனது பாதுகாப்பை தன்னிச்சையாக நீக்கியதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

மேலதிகமாக, தனக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து மதிப்பீடு செய்ய பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அதேபோல், தனக்கு வழங்கப்பட்ட முழு பாதுகாப்புப் படையையும் திருப்பித் தருமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும்  மனுதாரர் மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd