web log free
April 03, 2025

யாழ் - திருச்சி இடையே புதிய விமான சேவை

 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவையினை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் மட்டும் வழங்கி வருகிறது. இந்த விமானம் தினமும் 2 சேவைகளை திருச்சி விமான நிலையத்திற்கு வழங்கி வருகிறது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் இந்த விமான சேவையை நம்பி உள்ளனர். திருச்சியில் இருந்து இலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்கு செல்வதும், பின்னர் அங்கிருந்து இலங்கை வழியாகவே திருச்சி விமான நிலையத்திற்கு வருவதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் நேரடி விமான சேவை இல்லாத காரணத்தினால் இந்த விமான சேவையை பயன்படுத்தும் நிலையில் இருந்து வருகிறது.

மேலும் இந்த விமான சேவை தினமும் 2 முறை மட்டுமே திருச்சிக்கு இயக்கப்படுவதால் அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

மேலும் வளைகுடா நாடுகளில் இருந்து வருபவர்கள் தவிர திருச்சிக்கு இலங்கையில் இருந்து வருபவர்களும் இந்த விமான சேவையை மட்டுமே நம்பி இருக்கும் நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் புதிய விமான சேவையாக இலங்கை யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு அடுத்த மாதம் (மார்ச்) மாதம் முதல் புதிய சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளது.

இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் மிக எளிதாக விமான தொடர்பினை பெற்று குறைந்த கட்டணத்தில் வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு ஏதுவாக இருக்கும்.

மேலும் இலங்கைக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கும் எளிதாக இருக்கும் என வியாபாரிகள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய நேரப்படி மதியம் 12.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம் மதியம் 1.55 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சென்றடையும்.

மீண்டும் இந்த விமானம் மதியம் 2.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மாலை 3.50 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடையும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான சேவை அதிக அளவிலான மக்கள் பயன்படும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last modified on Saturday, 22 February 2025 02:58
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd