நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகிச் செல்ல முடியாதென, சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழுநிலை விவாதத்தில், உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் எந்த திசையை நோக்கி இந்த நாட்டை கொண்டு செல்லப் போகின்றது என்பது புரியவில்லை. எவ்வாறு இந்த வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டது என்றும் புரியவில்லை.
தற்போதைய அரசாங்கம் சோஷலிச அரசாங்கம் என கிராமிய மக்கள் நினைத்துள்ளனர்.
கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்ற திட்டமோ அல்லது அதற்கான வேலைத் திட்டங்கள் தொடர்பிலோ வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
இளைஞர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.இந்த வரவு செலவுத் திட்டத்தில் அந்தக் கனவுகளுக்கு உயிரூட்டப்படுமா? என தெரியவில்லை. ஆனால் உள்ள கனவுகளையும் கலைக்கும் வகையிலேயே வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்புகள் உள்ளன. எதிர்பார்ப்புகளுடன் உள்ள மக்களை மகிழ்விக்கும் பொறுப்பும் காணப்படுகிறது.அவர்களின் சம்பளம், வறுமை நிலை , சுற்றுலாத்துறை ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் பாரிய மாற்றங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆனால் எதுவும் நடக்கவில்லை.