இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தின் இரட்டை நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, உக்ரைன் மற்றும் இலங்கை தொடர்பான ஐ.நா.யின் அணுகுமுறையில் உள்ள வேறுபாட்டை விமர்சனம் செய்யும் வகையில், அவர் தனது கருத்துக்களை வெளியிட்டார்.
ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது, உக்ரைன்-ரஷ்யா போரின் நடப்புச் சூழ்நிலையில், அமெரிக்கா போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிக்கின்றது, அதே நேரத்தில் ரஷ்யா தன் இலக்குகளை அடைய பெரிய தியாகங்களைச் செய்து வருகின்றது.
எனினும், பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியைச் சுற்றிய முக்கிய பிரச்சினைகளில் மெளனமாக இருக்கின்றன. அதற்கும் மேலாக, உக்ரைனில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படாதது ஒரு ஜனநாயக மீறலாகும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், செப்டம்பர் மாதத்தில் இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் ஒரு தீர்மானத்தை முன்வைக்க உள்ளதால், இதை இலங்கை அரசாங்கம் மற்றும் அரசியல் கட்சிகள் மிகுந்த முக்கியத்துவத்துடன் அணுக வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.