நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை அல்லது நாளைமறுதினமான திங்கட்கிழமைக்கு பின்னர் எரிபொருள் தீர்ந்துவிடும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை பணம் செலுத்தி ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருளின் கையிருப்பே தற்போது கிடைக்கப்பெறுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள எரிபொருட்கள் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்குள் விநியோகிக்கப்படும் எனவும் புதிய எரிபொருள் ஓர்டர் செய்யப்பட மாட்டாது எனவும் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எமது பிரச்சினை தீரும் வரை புதிதாக எரிபொருட்களை ஓர்டர் செய்யப் போவதில்லை எனவும் இதன் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று சதவீத கமிஷனை நீக்கிவிட்டு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முடிவு விவாதிக்கப்பட்டபோதும் இதற்கு சாதகமான பதில் கிடைக்காதபோது இந்த நடவடிக்கையைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறுகிறார்.
எவ்வாறாயினும், இந்த நிலையில் ஜனாதிபதி உட்பட அனைத்து அதிகாரிகளும் தலையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.