தமிழரசு கட்சியை பிளவுபடுத்த சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசுக் கட்சிக்கு எதிராக பல்வேறு சதி வலைகள் பின்னப்படுகிறன.
அதிலும் தமிழரசுக்கட்சியை எப்படியாவது சிதைத்து அதனை உடைத்து கட்சியை பிளவுபடுத்தி விட வேண்டுமென சிலர் செயற்படுகின்றனர்.
இதனடிப்படையில் புதிய தமிழரசுக் கட்சி உருவாக்கம் குறித்து பேசப்படுகிறது.
உண்மையில் அப்படியாக கட்சிக்குள் இருப்பவர்கள் யாரும் கருதவில்லை.
அப்படியான எண்ணங்கள் கூட அவர்களிடத்தே இல்லை. ஏனெனில் கட்சியில் பலருடனும் இதுதெடர்பில் பேசியிருந்த போது அவர்கள் அனைவரும் இதனை மறுதலித்துள்ளனர்.
குறிப்பாக தமிழ்மக்களின் நீண்டகால பாரம்பரியக் கட்சியாக காணப்படுகின்ற இந்த தமிழரசுக் கட்சியை எப்படியாவது உடைத்துவிட வேண்டுமென விசமத்தனமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகிறன.
தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் கடந்த 75 வருடகால வரலாற்றில் சோரம் போகாத ஊழலில் ஈடுபடாத தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சியாக திகழ்ந்து வருகிறது.
இத்தகைய கட்சியை உடைக்க பலரும் பல சந்தர்ப்பங்களில் முயற்சி செய்திருந்தாலும் இது பலனளிக்காத நிலைமையே ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழரசை பிளவு படுத்தும் நோக்கில் முன்வைக்கப்படும் பொய்ப் பிரசாரங்களை சரியான முறையில் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்தார்.