தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்ற 267 சபைகளிலும் நிச்சயம் நாம் ஆட்சியமைப்போம். மக்கள் வழங்கிய ஆணைக்கு புறம்பாக எவரேனும் செயற்பட முற்பட்டால், அத்தகைய சவாலையும் அனைத்து வழிகளிலும் எதிர்கொள்ள தயார் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.யின் 60ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜூன் மாதம் 2ஆம் திகதிக்கு பிறகு எமக்குக் கிராமத்தின் பலமும் கிட்டும். 152 சபைகளில் ஆரம்பத்திலேயே தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும். ஏனைய 115 சபைகளில், சபை நடக்கும் நாளில் ஆட்சி அமைக்கப்படும்.
மக்களாணை என்றால் என்னவென்பதை சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். சபைகளில் முதல் இரு இடங்களை பிடித்த தரப்புகள்தான் ஆட்சியமைக்க வேண்டும் என்றே மக்கள் கருதுகின்றனர். அந்தவகையில் தேசிய மக்கள் சக்தி வென்ற 267 சபைகளிலும் நாம் ஆட்சியமைப்போம். அது மக்களாணை மூலம் எமக்கு வழங்கப்பட்ட உரிமையாகும்.
நாங்கள் முன்னிலையில் உள்ள சபையில், எம்மைமீறி முடிந்தால் ஆட்சியை அமையுங்கள். அவ்வாறு அமைத்தாலும் மூன்று, நான்கு மாதங்கள்தான் பயணிக்க முடியும். நாம் மக்களின் ஆணையைத்தான் மதிக்கின்றோம். அதனுடன் விளையாட முற்படக்கூடாது' - என்றார்.