web log free
April 04, 2026

ஆபிரிக்காவின் புகழ்மிகு அரசியல் தலைவர் இன்று இலங்கை வருகை

தென்னாபிரிக்காவின் இரண்டாவது ஜனநாயக ஜனாதிபதியும் ஆபிரிக்காவின் புகழ்மிகு அரசியல் தலைவர்களில் ஒருவருமான தாபோ ம்பெகி இன்று(26) முற்பகல் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் வருடாந்த மீளாய்வு விழாவில்(EOTY) பிரதம அதிதியாக பங்கேற்பதற்காகவே தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நாட்டிற்கு வருகை தருகிறார்.

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் இந்த வருடத்திற்கான வருடாந்த மீளாய்வு விழா நாளை(27) நடைபெறவுள்ளது.

சில தினங்களுக்கு நாட்டில் தங்கியிருக்கும் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தாபோ ம்பெகி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இளம் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வர்த்தக தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளதுடன் வார இறுதியில் கம்மெத்த நிகழ்விலும்  பங்கேற்கவுள்ளார்.

நிறவெறியிலிருந்து தென்னாபிரிக்காவை விடுவித்து ஜனநாயக நீரோட்டத்திற்குள் கொண்டுவந்த முதலாவது ஜனநாயக ஜனாதிபதியான நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய அரசியல் நண்பராக தாபோ ம்பெகி செயற்பட்டிருந்தார்.

நெல்சன் மண்டேலா ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் தாபோ ம்பெக்கி பிரதமராக கடமையாற்றியிருந்தார்.

மண்டேலாவின் ஆட்சிக்காலம் நிறைவடைந்தவுடன் 1999ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் இரண்டாவது ஜனநாயக ஜனாதிபதியாக பதவியேற்ற தாபோ ம்பெகி 2008ஆம் ஆண்டு வரை அந்த பதவியில் நீடித்தார்.

ஆபிரிக்க பிராந்தியத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை துரிதமாக அடைந்த நாட்டை உருவாக்கும் செயன்முறையின் முன்னோடியாகவும் முன்னாள் ஜனாதிபதி தாபோ ம்பெகி திகழ்கின்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd