web log free
August 01, 2025

துமிந்த பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

அதன்படி, இன்று (14) துமிந்த திசாநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 250,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்குமாறு கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டார். 

இரண்டு பிணையாளர்களும் கொழும்பு மாவட்டத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கவும் உத்தரவிட்டார். 

சந்தேக நபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

சந்தேக நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டுமெனில், துப்பாக்கியுடன் அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய அவரது சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், சம்பவம் நடந்த நேரத்தில் சந்தேக நபரிடம் துப்பாக்கி இல்லை என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். 

அதன்படி, தற்போது முன்வைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேக நபருக்கு எதிராக வழக்கைப் பராமரிக்க முடியாது என்று ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார். 

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி, பின்னர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd