web log free
October 14, 2025

வரி விடயத்தில் இலங்கைக்கு பாரிய நிவாரணம்

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 44% இலிருந்து 20% ஆக குறைப்பதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பான உத்தரவை வியாழக்கிழமை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

முதலில் கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை பொருட்களுக்கு 44% வரி விதிக்கப்படுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். பின்னர், அதனை 30% ஆக குறைப்பதாக, 2025 ஜூலை 10 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.

2025 ஏப்ரல் 02ஆம் திகதி, அமெரிக்கா உள்நாட்டு பொருளாதார அவசரநிலையை அறிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், உலக நாடுகள் அனைத்திற்கும் குறைந்தபட்சம் 10% வரி விதிக்கப்படும் எனவும், மிகப் பாரிய வர்த்தக நாடுகள் அல்லது வர்த்தகக் கூட்டமைப்புகளுக்கு மேலும் உயர்ந்த வரி விதிக்கப்படும் எனவும் அறிவித்தார். இதை அவர் “விடுதலை தினம்” (Liberation Day) என குறிப்பிட்டார்.

ஓகஸ்ட் 01 ஆம் திகதிக்கு முன்னதாக சில மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையில், வெள்ளை மாளிகை தனது திருத்தப்பட்ட புதிய வர்த்தகக் கொள்கையை நேற்றிரவு வெளியிட்டுள்ளதோடு, புதிய வரி விதிப்புகளையும் அறிவித்துள்ளது.

2025 ஏப்ரல் 02 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட 10% “பொதுவான” வரி விகிதம் தொடரும் எனவும், அது அமெரிக்கா அதிகமாக ஏற்றுமதி செய்கிற நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஆனால், அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக வசதிகள் கொண்ட நாடுகளுக்கு 15% புதிய வரி விகிதம் அமுலாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 நாடுகளுக்கு இந்த 15% விகிதம் பொருந்தும். இது ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட சில வரித் திருத்த விகிதங்களை விட குறைவாகவும், சில நாடுகளுக்கு இது அதிகமாகவும் காணப்படுகின்றது.

மேலும், 15% விகிதத்தைவிட அதிகமாக வரி விதிக்கப்படவுள்ள 12 இற்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளதாகவும், அவை அமெரிக்காவுடனான அதிக வர்த்தக வாய்ப்பு கொண்ட நாடுகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த புதிய தீர்வை வரித் திட்டம் இன்று (01) முதல் அமுலுக்கு வராது எனவும் ஓகஸ்ட் 07 ஆம் திகதி முதலே அமுக்கு வரும் எனவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சுங்கத்துறை புதிய வரிகளை வசூலிக்க தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு நேரம் வழங்கும் நோக்கில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட சில நாடுகளுக்கான வரிகள் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Last modified on Friday, 01 August 2025 03:49
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd