web log free
September 17, 2025

முன்னாள் ஜனாதிபதிகளின் வீடுகளுக்கு என்ன நடக்கும்?

முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் பொருளாதார ரீதியில் நன்மையளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

1994ஆம் ஆண்டு அமைச்சராக பதவியேற்ற நாள் முதல் தற்போது வரை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே வாழ்ந்திருக்கின்றனர். 

இவ்வாறானவர்கள் தான் தம்மால் இவற்றிலிருந்து செல்ல முடியாது எனக் கூறிக் கொண்டிருந்தனர்.

ஆனால் இவர்கள் அனைவருக்கும் கொழும்பில் இல்லங்கள் உள்ளன. அவர்கள் பரம்பரை பரம்பரையாக உத்தியோகபூர்வ இல்லங்களில் வாழ்வதற்கு அடிமையாகியுள்ளனர். இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கே மக்கள் எமக்கு ஆணையை வழங்கியிருக்கின்றனர். 

எம்மால் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த பொது சட்டத்தின் கீழ் தற்போதைய ஜனாதிபதிக்கான சிறப்புரிமைகளும் நீக்கப்பட்டுள்ளன. மக்கள் இதனைப் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சட்ட நிறுவனமொன்றின் ஊடாக குறித்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு கால அவகாசம் கோரியிருக்கின்றார். சிலர் இல்லத்திலிருந்து வெளியேறிருந்தாலும் பொருட்களை ஒப்படைக்கவில்லை.

இவர்கள் முழுமையாக வெளியேறியதன் பின்னர் அந்த இல்லங்களை எவ்வாறு பயன் மிக்கதாக பயன்படுத்துவது என்பது குறித்து அவதானம் செலுத்தப்படும். அவற்றின் பெறுமதி, சந்தைப் பெறுமதி என்பவற்றை கணித்து பொருளாதார ரீதியில் நன்மை கிடைக்கும் வகையில் அவை பயன்படுத்தப்படும்.

பெரும்பாலான அரச நிறுவனங்கள் பல மில்லியன் வாடகையை கட்டிடங்களுக்காக செலுத்திக் கொண்டிருக்கின்றன. அவ்வாறான நிறுவனங்களை இவற்றுக்கு மாற்ற முடியுமா என்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd