web log free
October 18, 2025

வசீம் தாஜுதீன் கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவரது வாகனத்துக்கு பின்னால் பயணித்த மற்றுமொரு வாகனத்தில் இருந்த ஒருவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் மித்தெனியே கஜ்ஜா என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விசேட ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்ட அவர், அந்த வாகனத்தில் பயணித்த நபர் மித்தெனியே கஜ்ஜா என்பதை அவரது மனைவி அடையாளம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் 2012ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி நாரஹேன்பிட்டி ஷாலிகா மைதானம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்த நீண்டகால விசாரணையில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் விபத்தாகக் கருதப்பட்டு, நாரஹேன்பிட்டி காவல்துறை மற்றும் பொரளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முடித்துவைக்கப்பட்ட இந்த வழக்கு, 2015 ஆம் ஆண்டில் அன்றைய கொழும்பு பிரதி காவல்துறை மா அதிபர் காமினி மாத்துரட்டவின் அறிக்கை அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு மாற்றப்பட்டது.

குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட விரிவான விசாரணையில், ஆரம்ப பிரேதப் பரிசோதனை முறையாக நடத்தப்படவில்லை என்பதும், மரணத்தில் சந்தேகம் இருப்பதும் தெரியவந்தது.

பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் தாஜுதீனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், மார்பு மற்றும் கழுத்துப் பகுதிகளில் எலும்புகள் காணாமல் போயிருந்ததுடன், தாஜுதீனின் மரணம் விபத்தல்ல, அது ஒரு கொலை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கொலையாகக் கருதி விசாரணையைத் தொடர்ந்த குற்றப்புலனாய்வு திணைக்களம், தாஜுதீன் கடைசியாக ஹேவலொக் டவுனில் ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகே வாகனத்தை நிறுத்தி தண்ணீர் போத்தல் வாங்கச் சென்றதையும், அங்கிருந்து புறப்பட்டபோது அவரது வாகனத்தை மற்றொரு வாகனம் பின்தொடர்வதையும் சிசிடிவி காட்சிகளில் கண்டறிந்தது.

இரண்டாவது வாகனத்திற்கு அருகில் நின்ற அடையாளம் தெரியாத ஒரு நபரின் காட்சியை குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டது, எனினும் குறித்த நபர் அடையாளம் காணப்படவில்லை.

சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பெக்கோ சமன் உள்ளிட்ட பல தேடப்படும் குற்றவாளிகள் மூலம் இந்த வழக்கில் ஒரு புதிய துருப்பு கிடைத்துள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட அருண சாந்த, எனப்படும் "மித்தெனிய கஜ்ஜா"வின் கொலையுடன் பெக்ககோ சமனுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு கஜ்ஜாவின் மனைவியிடமிருந்து ஒரு தன்னார்வ அறிக்கை கிடைத்தது. தனது கணவருக்கு அச்சுறுத்தல்கள் வந்ததாகவும், அவர் 2023ஆம் ஆண்டு ஒரு யூடியூப் நேர்காணலில் தாஜுதீன் வழக்கு குறித்துப் பேசியதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

தாஜுதீன் வழக்கில் இரண்டாவது வாகனத்திற்கு அருகில் இருந்த நபரின் சிசிடிவி படத்தை கஜ்ஜாவின் மனைவிக்குக் காண்பித்தபோது, தனது கணவரின் நாட்பட்ட இடுப்பு வலியால் அவர் கைகளை இடுப்பில் வைக்கும் தோரணையைச் சுட்டிக்காட்டி, அந்தப் படத்தில் இருப்பது மறைந்த தனது கணவர் அருண சாந்த எனப்படும் "கஜ்ஜா" தான் என்று அவர் அடையாளம் காட்டினார்.

13 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த வழக்கில் இந்த அடையாளம் காணல் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

குற்றப்புலனாய்வு திணைக்களம் தொடர்ந்து வசீம் தாஜுதீன் கொலையை தீவிரமாக விசாரித்து வருவதாக பதில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd